Friday, July 17, 2009

பரபரப்பு பதிரிகையில் இடம்பெற்ற லெனினின் பேட்டி

2005ம் ஆண்டில் வெளியாகி மக்களின் பாராட்டைப் பெற்ற இனியவர்கள் திரைப்படத்தின் இயக்குனர் லெனின் M. சிவத்தினால் உருவாக்கப்படும் மற்றுமோர் தரமான திரைப்படம் 1999(http://www.1999movie.com/).
இத்திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் லெனினிடம் கேட்டபோது, எமது மக்களுக்காக முற்றிலும் எமது இளைஞர்களினால் கனடாவில் உருவாக்கப்பட்ட ஒரு சிறத்த தரமான திரைப்படம்தான் 1999 என்று கூறினார்.

பரபரப்பு நிருபர்: ஒரு இலக்கத்தைத் தலைப்பாகத் தேர்ந்தொடுத்ததன் காரணம் என்ன?

பதில்: எமது நாட்டில் நடைபெற்ற இனப்படுகொலைகளின் விளைவாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களில் அதிகமானோர் 80களிலும் 90களிலும் ரொரன்ரோ நகரில் குடியேறினார்கள். குறிப்பாக இளைஞர்கள் இருவேறுபட்ட கலாச்சாரங்களுக்கிடையில் சிக்குண்டு பல பிரச்சனைகளை எதிர்நோக்கினார்கள். 1999ம் ஆண்டில் எமது தமிழ் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், கோஷ்டிகள். இக்கோஷ்டிகளுக்கிடையிலான மோதல்கள் அவற்றினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் போன்றவற்றை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதால் இத் திரைப்படத்திற்கு 1999 என்ற பெயரை வைத்துள்ளோம்.


பரபரப்பு நிருபர்: இப்படியான ஒரு கதையைத் தெரிவு செய்ததன் நோக்கம் என்ன?

பதில்: பல வருடங்களாக எமது இனத்திற்கெதிராக நடைபெறும் அநியாயங்களையும் அதனால் நாங்கள் இழந்தவற்றையும் முக்கியமாக சமீபத்தில் தாயகத்தில் நடைபெற்ற சொல்லொணாத் துயரங்களைப் பார்க்கும் போது எமக்கு உதவ எம்மைத்தவிர யாருமில்லை என்பது தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையிலுள்ள நாம் எவ்வளவு ஒற்றுமையாக வாழவேண்டும் எமக்குள் ஏன் பேதங்களும் பிரச்சனைகளும்? ஆதுமட்டுமல்ல கோஷ்டிகளில் இருக்கும் இளைஞர்களைத் தனித்தனி எடுத்துப் பார்த்தால் அவர்களில் பெரும்பாலானவர்கள் நல்லவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் இப்படியான நிலைக்கு மாறக் காரணம் என்ன? இவற்றை எப்படித் தவிர்க்கலாம்? இதில் பெற்றவர்களின் பங்கு என்ன? எமது சமுதாயத்தின் பங்கு என்ன? இதிலிருந்து நாங்கள் அறியக்கூடியது என்ன? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடைதேடும் முகமாகப் பல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தைத் தயாரித்துள்ளோம்.

பரபரப்பு நிருபர்: படம் எப்படி வந்துள்ளது?

பதில்: நாம் எதிர் பார்த்ததைவிட மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. எமது கலைஞர்கள் அனைவருமே அவர்களது பாத்திரமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அத்துடன் எமது ஒளிப்பதிவாளர் சபேசன் மிகவும் சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளாhர். அதுமட்டுமல்ல படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்வையாளர்களை யோசிக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இவற்றுடன் இப்படத்தை கனடாவில் பிறந்து வளர்ந்த இளையோரும் அவர்களின் பெற்றோர்களுமாக இருவேறுபட்ட தலைமுறையினராலும் ரசிக்கத்தக்க முறையில் உருவாக்கியுள்ளோம்.

பரபரப்பு நிருபர்: இப்படத்தில் வரும் பாடல்களைப்பற்றிக் கூறுங்கள்

பதில்: பாடல்கள் அனைத்தும் மிகமிகச் சிறப்பாக அமைந்துள்ளன. எமது தமிழ் இளைஞர் ராஜின் இசையமைப்பில் பிரபல இந்திய பின்ணனிப்பாடகர்களான பாலசுப்பிரமணியம், கார்த்திக், திப்பு, கரணி ஆகியோருடன் எமது ஈழத்துக் கலைஞாகளும் பாடியுள்ளார்கள். இலங்கையிலுள்ள சூரியன் வானொலியினால் இப்பாடல்கள் வெளியிடப்பட்டு அவை மக்களால் மிகவும் வரவேற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் SONY எமது இசைத்தட்டுக்களை வெளியிடும் அங்கீகாரத்தை எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பரபரப்பு நிருபர்: உங்கள் முதல் படமான இனியவர்களைப்போல 1999னும் ஒரு வெற்றிப்படமாக அமையுமா?

பதில்: என்னைப்பொறுத்தவரை இனியவர்களை ஒரு வெற்றிப்படம் என்று சொல்லமுடியாது. மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்ட படம் என்று சொல்லலாம். காரணம் நல்ல படம் என்ற செய்தி மக்களைச் சென்றடையும் முன்னரே நாம் நிதிப் பற்றாக்குறை காரணமாகத் திரையரங்குகளில் கூடிய நாட்கள் திரையிட முடியாமல் போய்விட்டது. DVDயில் பார்த்த பலர் தமது பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் தெரிவித்தனர். ஓவ்வொருவரது விமர்சனங்களையும் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்ட 1999 நிச்சயமாக ஒரு வெற்றிப்படமாக அமையும் என்று திடமாக நம்புகின்றோம். இப்படம் இவ்வளவு சிறப்பாக அமைந்ததற்கு 1999 குழுவிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட அங்கத்தவர்களின் கடுமையான உழைப்பும், எமது மக்களால் இனியவர்கள் படத்திற்காகக் கொடுக்கப்பட்ட விமர்சனங்களும்தான் காரணம்.

பரபரப்பு நிருபர்: தரத்தைப் பொறுத்தவரையில் இனியவர்களுக்கும் 1999க்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

பதில்: நாலு வருடங்களுக்கு முன் வெளியாகிய இனியவர்கள் மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தாலும் அதை ஒரு சிறந்த ஈழத்துக் குறந்திரைப்படம் என்றுதான் கணிக்கக்கூடியதாக இருந்தது. இந்தியத் தமிழ்ப் படங்களோடு ஒப்பிடும்போது அதில் பல குறைகளைக் காணக்கூடியதாக இருந்தது. காரணம் போதிய வசதிகளோ முன் அனுபவங்களோ இருக்கவில்லை. தற்போதும் எங்களிடம் போதிய வசதிகள் இல்லாவிட்டாலும் எனக்கும் என் குழுவிலுள்ளவர்களிற்கும் கிடைத்துள்ள முன் அனுபவங்களாலும் எங்கள் ஒன்றுபட்ட கடுமையான உழைப்பாலும் 1999 இனியவர்களைவிட பல மடங்கு சிறந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. எங்களைப்பொறுத்தவரை எங்கட பெடியள் எடுத்திருக்கிறாங்கள் நாங்கள் ஆதரவைக் கொடுக்கவேண்டும் என்பதற்காக வராமல் 1999ஐ பார்க்கவேண்டும் என்பதற்காகவே மக்கள் வருவார்கள் என்பதை உறுதியாக நம்புகின்றோம்.

பரபரப்பு நிருபர்: 1999 சென்ற மார்ச் மாதம் வெளியிடப்படப்போவதாகப் கேள்விப்பட்டடேன். ஏன் காலதாமதம் ஏற்படுகிறது? எப்போது வெளியிடப்போகிறீர்கள்?

பதில்: நாம் திட்டமிட்டபடி படம் முடிக்கப்பட்டிருந்தபோதிலும். பல்லாயிரக்கணக்கான எமது உறவுகளை இழந்துள்ள வேளையில் படத்தை வெளியிடும் மனநிலயில் நானோ என் குழுவினரோ இருக்கவில்லை. இப்படப் பாடல்களுக்கான CD வெளியீடு ஓகஸ்ட் மாதத்தில் நடைபெறும். 1999 படம் கனடாவிலும் ஐரோப்பாவிலும் இந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும்.

பரபரப்பு நிருபர்: இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலும் இப்படம் வெளியிடப்படவுள்ளதா?

பதில்: வெளியீட்டாளர்கள் கிடைத்தால் நிச்சயமாகச் செய்வோம்.
கேள்வி: எமது மக்களிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?பதில்: தமிழர்களான நாம் எல்லாத் துறைகளிலும் எமக்கென்று ஒரு முத்திரையைப் பதிக்க வேண்டும். அதற்கான ஒரு முயற்சிதான் 1999. ஒரு ஈழத் தமிழனாக எமது மக்களிடமிருந்து இப்படத்திற்கான ஆதரவைத்தவிர வேறு எதையும் நான் எதிர்பார்க்கவில்லை. எமக்கு ஏற்பட்ட அநீதிகளை திரைப்படங்கள் மூலமாக வெளியிட்டால் மறைக்கப்பட்ட பல உண்மைகள் இந்த உலகத்தின் கண்களைச் சென்றடையும். அதைச் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லாத ஒரு சுதந்திர நாட்டில் நாங்கள் இருந்தாலும் அதற்கான வசதிகுறைவுகளை எங்கள் கலைஞர்கள் எதிர்நோக்குகிறார்கள். எம் கலைஞர்களின் நல்ல படைப்புக்களை ஆதரித்து எமக்கென்று ஒரு சுதந்திரமான சினிமாத் துறையை நாம் உருவாக்க உங்கள் ஒவ்வொருவரது ஆதரவும் எங்களுக்கு வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் எங்கள் படத்தைப் பார்த்து உங்கள் விமர்சனங்களை எங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். உங்கள் ஆதரவும் விமர்சனங்களும்தான் எங்களை முன்னேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.


பரபரப்பு நிருபர்: வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

பதில்: மக்களின் அமோக ஆதரவைப்பெற்ற இந்தப் பரபரப்புப் பத்திரிகையில் எமக்கா இவ்வளவு பெரிய பகுதியை ஒதுக்கித் தந்து எங்களுக்கு ஆதரவு தந்ததற்காக எனது தனிப்பட்ட முறையிலும் எமது 1999 குழு சார்பாகவும் எமது மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பரபரப்புப் பத்திரிகையைப்போல மற்றய ஊடகங்களும் தங்களது ஆதவைத் தந்து வளரும் எம் கலைஞர்களை ஊக்குவிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். நன்றி.


1999 பற்றி http://www.1999movie.com/ என்ற இணையத்தளத்தில் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment