Friday, November 12, 2010

1999 திரைப்படத்தின் DVD வெளியாகியுள்ளது


உடனடியாக பிரசுரிப்பதற்காக:

1999 திரைப்படத்தின் DVD வெளியாகியுள்ளது
ரொரன்ரோ, கனடா – கார்திகை 8, 2010
கடந்த மாதம் (புரட்டாசி) 30ம் திகதி, ரொரன்ரோவில் லெனின். M. சிவத்தின் இயக்கத்தில் உருவான 1999 என்ற தமிழ்த் திரைப்படத்தின் DVD வெளியீட்டு விழா மிகவும் சிறப்பாக நடந்தேறியுள்ளது. முதல் பிரதியை நோர்வேயில் வசிக்கும் பிரபல ஈழத்தமிழ்க் கவிஞர் திரு.வசீகரன் சிவலிங்கம் பெற 1999 திரைப்படத்தின் தயாரிப்பு நிர்வாகப் பொறுப்பாளரான திரு. ரமேஸ் செல்லத்துரை வெளியிட்டார் என்பதை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கற்பனாலயாவின் பிரதம
தயாரிப்பாளரான திரு. சபேசன் ஜெயராஜசிங்கம் தெரிவித்துள்ளார். இத்திரைப்படத்தை பகவான் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து கற்பனாலயா நிறுவனம் தயாரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இத் திரைப்படம் வன்கூவர் சர்வதேச திரைபட விழாவில் தெரிவாகி முதல் பத்து படங்களில் ஒன்றான விருதையும், நோர்வே தமிழ் திரைபட விழாவில் தெரிவாகி சிறந்த திரைப்படத்திற்கான நள்ளிரவுச் சூரியன் என்ற விருதையும், ரொரென்ரோ ரீல் வார்ல்ட் என்ற திரைபட விழாவில் தெரிவாகி பார்வையாளர்களின் விருதையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் உலகம் பூராவும் நடைபெறும், பல திரைப்பட விழாக்களில் தெரிவாகி பல விருதுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தை பார்வையிட்ட பிரபல ஹொலிவுட் இயக்குர் தீபா மேத்தா தனக்கு இந்தப் படம் மிகவும் நன்றாகப் பிடித்துள்ளது என்றும், அதன் உண்மைத்தன்மை தனது மனத்தை நெகிழ வைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
பிரபல தென்னிந்திய இயக்குநர்களாகிய சசிகுமார், சமுத்திரகனி, S. P. ஜனநாதன், மிஸ்கின் போன்றோரின் பாராட்டையும் இத் திரைப்படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரொரன்ரோ மாநகரத்தில் அமைதியாக ஆரம்பித்த ஒரு சனிக்கிழமை அன்று, குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற துவக்குச்சூட்டுச் சம்பவம் ஒன்றினால் மூன்று இளைஞர்களின் வாழ்க்கை முற்றாக மாறுகிறது. தாயில்லாத "அன்பு" என்ற இளைஞன் தந்தையுடன் ஸ்காபுரோவில் வாழ்ந்துவருகிறான். தனிமைக்குள் தள்ளப்பட்டு அன்புக்காக ஏங்கும் இவன், சண்டைக்குழு ஒன்றில் இணைகிறான். "குமார்"- தம்பியைத்தவிர எந்த உறவுகளுமே இல்லாத இவன், ஒரு சண்டைக்குழுவின் தலைவன். இவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவன்தான் "அகிலன்".
தனது முயற்சியால் வாழ்க்கையில் முன்னேறி, பல்கலைக்கழக இறுதியாண்டில் பயின்றுகொண்டிருக்கும் இவன், தன்னைப்போல பெற்றோரை இழந்த சிறுவர்களுக்காக நிதி திரட்டி அவர்களுக்கு உதவுவதையே தனது கடமையாகக் கொண்டவன். இம்மூவருமே இலங்கையில் நடைபெற்ற இனப்போராட்டத்தில் குழந்தைப் பருவத்திலேயே தம் உறவுகளைப் பறிகொடுத்தவர்கள்.

1990களில் நடைபெற்ற பல சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அதில் சம்பந்தப்பட்டவர்கள் பலரின் அனுபவங்களையும் கருத்துக்களையும் ஆராய்ந்து, சண்டைக்காரர்கள் என்று சமுதாயத்தால் முத்திரைகுத்தப்பட்டாலும் அவர்களுக்குள்ளும் அன்பு, பாசம், நேசம் போன்ற உன்னதமான உணர்வுகள் இருப்பதையும், இவர்கள் இப்படியான நிலைக்கு மாறக் காரணம் என்ன?, இவற்றை எப்படித் தவிர்க்கலாம்?, இதில் பெற்றவர்களின் பங்கு என்ன?, எமது சமுதாயத்தின் பங்கு என்ன? ,இதிலிருந்து நாங்கள் அறியக்கூடியது என்ன? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடைதேடும்
வகையில் மிகவும் விறுவிறுப்பான ஒரு திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது "1999 ".

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் ரொரன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட லெனின் M. சிவத்தின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட முதல் முழுநீழத் திரைப்படம்தான் 1999. சர்வதேசத் திரைப்படவிழாகளில் தெரிவுசெய்யப்பட்டுத் திரையிடப்பட்ட முதல் ஈழத்தமிழர்களின் முழுநீள திரைப்படம் 1999 என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தைப்பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள் என்று அதன் இயக்குனர் லெனினிடம் கேட்டபோது -இத்திரைப்படமானது மிகவும் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டதென்றும் ,இதில் 100க்கும் மேற்பட்டவர்களின் உழைப்பு உள்ளது என்றும், இப்படத்தின் வெற்றி, தோல்வி என்பது ஒரு தனிநபரைச் சார்ந்தது இல்லை என்றும், அது ஒட்டு மொத்த 1999 குழுவையே சாரும் என்றும் குறிப்பிட்டார். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் தெரிவுசெய்யபட்டு பல விருதுகளைப் பெற்றது பெருமைக்குரிய விடயமாக இருந்தாலும், உலகம் முழுவதும் வாழும் அனைத்து தமிழர்களையும் சென்றடைந்து அவர்களின் முழுமையான ஆதரவையும் பெற்றால் தான் 1999 ஒரு உண்மையான வெற்றிப்படமாக அமையும் என்றும் மேலும் குறிப்பிட்டார்.

இத்திரைப்படத்திற்கான பாடல்கள், பின்னணி இசையை வழங்கியுள்ளார்- ராஜ் (ராஜ்குமார் தில்லையம்பலம் ).
இதில் வரும் பாடல்களை டாக்டர் S.P.பாலசுப்ரமணியம் , திப்பு , ஹரிணி , கார்த்திக் போன்ற பிரபல இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்களோடு ஈழத்து, கனேடியப் பாடகர்களும் பாடியுள்ளார்கள்.

இத் திரைப்படத்தின் ஐரோப்பிய நாடுகளுக்கான விநியோக உரிமையை வசீகரன் இசைக்கனவுகள் நிறுவனம்(VN Music Dreams, Oslo, Norway) பெற்றுள்ளது. இத் திரைப்படத்தின் DVDகளை மிகவிரைவில் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் பெற்றுக்கொள்ளலாம்.
1999 திரைப்படத்தின் DVD பிரதிகள் இப்போது உலகம் பூராவும் விற்பனையாகின்றன , மேலதிக விபரங்களை www.1999movie.com , www.vnmusicdreams.com என்ற இணையத் தளங்களின் ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம்.

திரைப்படம் பற்றிய மேலதிக விபரங்களுக்கு: http://www.1999movie.com | http://ta.wikipedia.org/wiki/1999_(திரைப்படம்) | http://www.facebook.com/1999movie | http://www.imdb.com/title/tt1458389/ |

ஊடகத் தொடர்புகளுக்கு info@1999movie.com , vnmusicdreams@gmail.com .

-- 30 --

No comments:

Post a Comment